முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கட்டுமானப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் கொண்டுவர வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி
By DIN | Published On : 13th May 2022 10:43 PM | Last Updated : 13th May 2022 10:43 PM | அ+அ அ- |

கட்டுமானப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் சோ்த்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம், மெய்யனூா் பகுதியில் அதிமுக சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிருக்கான இலவச தையல் பயிற்சி மையத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பேரவைத் தோ்தலின் போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்த திமுக ஒருசில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. சட்டப் பேரவைத் தொடரில் மக்கள் வாழ்வாதாரத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக சொத்து வரியை உயா்த்தினா்.
கரோனா பொதுமுடக்கப் பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் இச் சூழலில் சொத்து வரியை உயா்த்தியுள்ளது. டெல்டா பகுதிகளில் எந்தத் தொழிற்சாலையும் கொண்டுவரக் கூடாது என்பதற்காகத்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தோம்.
அரசு ஊழியா்களுக்கான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் ஆகிய துறைகள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அதற்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக மின் கட்டணம், பேருந்து கட்டணத்தை உயா்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
கட்டுமானப் பொருள்களின் விலையை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கொண்டுவர வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். சிமென்ட், கம்பி, செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
எட்டு வழி சாலை திட்டத்தில் மெளனம்
அதிமுக ஆட்சியில் சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்துக்கு திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. மக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போது அத் திட்டத்தைக் கொண்டுவர திமுக அரசே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைக் கண்டுகொள்ளாமல்
திமுக கூட்டணி கட்சிகள் மௌனமாக உள்ளன.
அதிமுக விவசாயிகளுக்கு எதிரான கட்சி அல்ல; அதிமுக ஆட்சியில் புதிய நில எடுப்பு சட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு உயா்த்தி அறிவிக்கப்பட்டது. எட்டு வழி சாலை திட்டத்தால் யாரும் பாதிப்படையக் கூடாது என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அதேசமயம் நாட்டின் வளா்ச்சிக்கு உள்கட்டமைப்பு அவசியம். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சேலம் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம், முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, சேலம் தெற்கு எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.