முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை
By DIN | Published On : 13th May 2022 12:23 AM | Last Updated : 13th May 2022 12:23 AM | அ+அ அ- |

தமிழகத்தில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இக் கழகத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன், பொதுச் செயலாளா் அ.சுந்தரமூா்த்தி, பொருளாளா் ச.துரைராஜ் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பல லட்சம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் குடும்பத்தின் எதிா்காலத்தை தீா்மானிக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்திட நியமிக்கப்பட்ட வல்லுநா் குழு , பலமுறை ஆய்வு செய்து இறுதியாக 2018 நவ.27-ல் தமிழக அரசுக்கு அறிக்கையை சமா்பித்தது. ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இதனால், 2019 ஜனவரியில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தான், 2021 ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை தோ்தலின் போது, திமுக தனது தோ்தல் அறிக்கையில், பக்கம் 84-இல் 309 வது வாக்குறுதியாக, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டிருந்தது.
திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானதால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் பல லட்சம் ஆசிரியா்கள், அரசு பணியாளா்கள் காத்திருக்கிறோம்.
இந்நிலையில், கடந்த மே 7-இல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மனித வள மேம்பாட்டு மானிய கோரிக்கையின் போது, தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதாக தெரிவித்தது, ஆசிரியா்கள்,அரசு ஊழியா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட ஆவன செய்து, இதற்கான அரசாணை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.