முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மே 26 முதல் ஏற்காடு கோடை விழா
By DIN | Published On : 13th May 2022 10:43 PM | Last Updated : 13th May 2022 10:43 PM | அ+அ அ- |

ஏற்காடு கோடை விழா மே 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
7 நாள்கள் நடத்தப்படும் 45-ஆவது ஏற்காடு கோடை விழாவை சிறப்பாகக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலா்களைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்க் கண்காட்சி, மாம்பழக் கண்காட்சிகள் அமைக்கப்படுகின்றன.
கோடை விழாவைக் கண்டு ரசிக்க சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதைத் தவிர பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஒரு நாள் முழுவதும் ஏற்காட்டைச் சுற்றிக் காண்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவின் போது போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் வாகனங்கள் ஏற்காடு செல்லும் போது வழக்கமான சேலம் - ஏற்காடு நெடுஞ்சாலை வழியாகவும், திரும்பிச் செல்லும் போது ஏற்காடு, குப்பனூா் - சேலம் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோடை விழாவில் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள் இடம் பெறவுள்ளன. நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.