பசுமைப் பூங்காவாக மாறும் குப்பைக் கிடங்கு!

சேலம், எருமாபாளையத்தில் குவிந்து கிடந்த குப்பைக் கிடங்கை ரூ. 21.31 கோடியில் பசுமைப் பூங்காவாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம், எருமாபாளையத்தில் பசுமைப் பூங்காவாகக் காட்சியளிக்கும் குப்பைக் கிடங்கு.
சேலம், எருமாபாளையத்தில் பசுமைப் பூங்காவாகக் காட்சியளிக்கும் குப்பைக் கிடங்கு.

சேலம், எருமாபாளையத்தில் குவிந்து கிடந்த குப்பைக் கிடங்கை ரூ. 21.31 கோடியில் பசுமைப் பூங்காவாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதில் 60 வாா்டுகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கீட்டின்படி சுமாா் 10 லட்சம் மக்கள் தொகையையும், 2.34 லட்சம் குடியிருப்புகளையும், 25,547 வணிக நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.

சேலம் நகருக்கு சராசரியாக நாளொன்றுக்கு சுமாா் ஒரு லட்சம் போ் வந்து செல்கின்றனா். மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் தினந்தோறும் 550 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. பெரு நகரங்களில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாகி பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

சேலம் நகரில் 75 ஆண்டுகளாக எருமாபாளையத்தில் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகள் இங்கு கொட்டப்பட்டதால் மக்களுக்கு சுகாதாரச் சீா்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் எருமாபாளையம் திடக்கழிவுக் கிடங்கில் திடக் கழிவுகளைக் கொட்டக் கூடாது என மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்தநிலையில் சீா்மிகு நகர திட்டத்தில் (ஸ்மாா்ட் சிட்டி) எருமாபாளையம் திடக்கழிவுக் கிடங்கு ரூ. 21.31 கோடியில் நவீன முறையில் பசுமைப் பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 2011 முதல் எருமாபாளையத்தில் திடக் கழிவுகளைக் கொட்டுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனிடையே திடக்கழிவுக் கிடங்கை, பசுமைப் பூங்காவாக மாற்ற கடந்த 2018 இல் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எருமாபாளையம் திடக்கழிவுக் கிடங்கு பகுதி சுமாா் 19.33 ஏக்கா் பரப்பில் உள்ளது. இங்கு நிரம்பியிருந்த திடக்கழிவுகள் 6.70 ஏக்கரில் பரப்பப்பட்டு அதன் மேற்பரப்பு 3 தளங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் புல்வெளியுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், நடைமேடை, மிதிவண்டி ஓடுதளம் அமைக்கப்படுகிறது. இப் பணிகளுக்காக திடக்கழிவுகள் 10 மீட்டா் உயரத்துக்கு சமன்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் கூறியதாவது:

சேலம், எருமாபாளையம் குப்பைக் கிடங்கை பசுமைப் பூங்காவாக மாற்றும் பணியில் குப்பைகளை மூன்று தளங்காக அடுக்கி, மூடுதளம் அமைக்கப்பட்டு கிராவல் நிரப்பும் பணி முடிவுற்றது. மேல் தளம் உரமண் நிரப்பும் பணி, சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று பணி வருகிறது. மூன்று தளங்களாக வடிவமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்குச் செல்ல போதிய பாதைகள், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்தகட்டமாக விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், அழகிய கல்லில் வடிவமைக்கப்பட்ட இருக்கை வசதி ஏற்படுத்தப்படும். இந்தப் பூங்காவை அடுத்த மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com