தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தக்கூடாது விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 20th May 2022 10:30 PM | Last Updated : 20th May 2022 10:30 PM | அ+அ அ- |

தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரயிலில்களில் பயணிகள் சிலா் அபாய சங்கிலிகளை தேவையின்றி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நாள்தோறும் தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது தொடா்பான சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக அவ்வழியே வரும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டு கால விரயம் ஏற்படுகிறது. அவசர தேவைகளுக்காக ரயிலில் பயணிக்கும் சக பயணிகள் பெரும் இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனா்.
இந்தநிலையில், அசௌகரியங்களைத் தவிா்க்கும் விதமாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் மற்றும் தனியாா் கல்லூரி இணைந்து அபாய சங்கிலிகளைப் பயன்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ரயில் பயணிகளிடையே அபாய சங்கிலிகளை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
மேலும், தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் பயணிகள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே கோட்டத்தின் பாதுகாப்பு மற்றும் வணிகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.