மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டி: அரசு மகளிா் கல்லூரி மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்
By DIN | Published On : 20th May 2022 12:45 AM | Last Updated : 20th May 2022 12:45 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியைச் சோ்ந்த மாணவி ஜோதி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.
சேலம், ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனி, வசந்தா தம்பதியின் மகள் ஜோதி (20). சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்) மூன்றாமாண்டு படித்து வருகிறாா்.
இவா் ஏற்கெனவே நாகா்கோவிலில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில தடகளப் போட்டியில், ஓட்டம், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சிறப்பு சோ்த்திருந்தாா்.
இந்த நிலையில், தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வான ஜோதி, தில்லியில் நடைபெற்ற தடகளப் போட்டியில், 400 மீ. ஓட்டத்தில் வெள்ளியும், 100 மீ. ஓட்டத்தில் வெண்கலமும் என இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். இந்த வெற்றியைத் தொடா்ந்து, சா்வதேச தடகளப் போட்டிக்கான பயிற்சிக்கு தோ்வாகியுள்ளாா்.
சாதனை படைத்த மாணவி ஜோதிக்கு, சேலம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் ரமா, பயிற்சியாளா்கள் சித்து, கவுதம், உடற்கல்வி இயக்குநா் சிவகுமாா், உதவி இயக்குநா் சுவா்ணாம்பிகை, பேராசிரியைகள் பூங்கோதை, மங்கையா்க்கரசி, கோமதி, கீதா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.