சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் குலுங்கிய ஏற்காடு கோடை விழா

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 15ஆம் தேதி 45-வது கோடை விழா தொடங்கியது.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் குலுங்கிய ஏற்காடு கோடை விழா

சேலம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 15ஆம் தேதி 45-வது கோடை விழா தொடங்கியது. வழக்கமாக ஆண்டுதோறும் 3 அல்லது 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் இந்த கோடை விழா நடப்பாண்டு வரும் 1-ம் தேதி வரை எட்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் சேலம் மாவட்டம் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்  கோடை விழாவின் ஐந்தாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் முழுவதும் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. 

இயற்கை எழிலோடு இதமான குளிரில் மக்கள் பயணித்தனர். ஏற்காடு பகுதிக்கு சென்றடைந்ததும் கோடை விழா மலர் கண்காட்சி நடக்கும் அண்ணா பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். அங்கு கூட்டம் அலைமோதியது. பல வண்ண மலர்களை ரசித்தபடி ஆங்காங்கே நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்த மலர் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் தேர், பெண்கள் இலவச பயணம் செய்யும் அரசுப் பேருந்து, மேட்டூர் அணை, மஞ்சள் பை போன்ற பூக்கள் நிறைந்த அலங்காரத்தில் முன்பு நின்று சுயபடம்  எடுத்துக் கொண்டனர்.

பல கண்காட்சியும் கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரி செய்ய வெளியூர் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு கூட்டம் அலைமோதியது. இதே போல மான் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட் ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் ஆகிய இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

கடந்த 4 நாள்களாக வந்த சுற்றுலா பயணிகள் கூட்டத்தை விட நேற்று அதிகளவில் மக்கள் வந்திருந்தனர். ஏற்காட்டில் திரும்பிய இடங்களில் எல்லாம் மக்கள் தலைகளாக காட்சியளித்தது.  பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோடை விழா நிகழ்ச்சிகளாக கொழு கொழு குழந்தைகள் போட்டி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டம் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த குழந்தைகளுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இதேபோல பெண்களுக்கான சமையல் போட்டி மற்றும் கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மொத்தத்தில் நேற்று ஏற்காடு கோடை விழாவில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஏற்காடு குலுங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com