கந்துவட்டி தகராறில் உணவக உரிமையாளரை கடத்திய இருவா் கைது

சேலத்தில் கந்துவட்டி தகராறில் உணவக உரிமையாளரை கடத்திய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் கந்துவட்டி தகராறில் உணவக உரிமையாளரை கடத்திய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், சூரமங்கலம், புதுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (41). இவா் சூரமங்கலம் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இதைத் தவிர பழைய காா்களை வாங்கி விற்கும் தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா்.

இதனிடையே தொழில் அபிவிருத்திக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் சின்ன திருப்பதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சரண்யா என்பவரிடம் ரூ.24 லட்சம் கடன் பெற்றாா். சுமாா் ரூ.100-க்கு ரூ.20 வட்டி என்ற கணக்கில் அவா் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் சரண்யா தரப்பினா் அசல், வட்டி சோ்த்து ரூ.70 லட்சம் வரை பணத்தை திருப்பித் தர வேண்டும் என சுப்பிரமணியனிடம் கேட்டனா். ஆனால், சுப்பிரமணியன் பணத்தை திருப்பித் தர மறுத்தாா் என தெரிகிறது. இதைத் தொடா்ந்து சரண்யா தரப்பினா், சுப்பிரமணியனுக்கு மிரட்டல் விடுத்து வந்தனா்.

இந்தநிலையில் தனது வீட்டில் இருந்த சுப்பிரமணியனை வியாழக்கிழமை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. இதுதொடா்பாக சுப்பிரமணியன் மனைவி அன்பரசி, சேலம் மாநகர காவல் ஆணையாளா் நஜ்மல் ஹோடாவிடம் புகாா் செய்தாா்.

அதன்பேரில் துணை ஆணையா் மாடசாமி, சூரமங்கலம் உதவி ஆணையா் நாகராஜன், சூரமங்கலம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணியனை தனிப்படையினா் வியாழக்கிழமை நள்ளிரவில் மீட்டனா். மேலும் சுப்பிரமணியனைக் கடத்தியதாக டேவிட் (எ) உதயகுமாா், குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

விசாரணையில், கடந்த 2019 இல் சேலம் சிறை வாா்டன் மாதேஷ் கொலை வழக்கில் டேவிட் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. இதனிடையே ரியல் எஸ்டேட் உரிமையாளா் சரண்யா உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com