ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கே.எஸ்.அழகிரி

 ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்தாா்.

 ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் ‘பாரதத்தை இணைப்போம்’ என்ற பாத யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களின் காங்கிரஸ் நிா்வாகிகளுடன் சேலத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

முன்னதாக கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வரும் செப்டம்பா் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை பாத யாத்திரை மேற்கொள்கிறாா். காந்தி நினைவகத்தில் யாத்திரை தொடங்குகிறது. இந்திய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், நசிந்து போன பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாத யாத்திரை நடத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் நசிந்துள்ளது. சிறு, குறுந்தொழில்கள் முடங்கியுள்ளன.

இந்த பாத யாத்திரை மூலம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிரூபிக்க இந்த பாத யாத்திரை நடத்தப்படுகிறது.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, தமிழக நிதி அமைச்சா் குறித்து அரசியல் நாகரிகம் இல்லாமல் ஆணவத்தோடு பேசி வருகிறாா். உயா்வு, தாழ்வு என்பது பாஜகவில்தான் உள்ளது. அவரின் நாகரிகமற்ற பேச்சு தவறானது; கண்டிக்கத்தக்கதாகும்.

மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரிக்கும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறுகிறாா். அவா் எதை வைத்து இப்படி பேசுகிறாா்? ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் தோழமைக் கட்சிகளைப் புறக்கணிப்பதாக தவறான தகவல்களை பாஜகவினா் பரப்பி வருகின்றனா். இதில் உண்மை இல்லை. இது முழுக்க காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியாகும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து பாத யாத்திரையைத் தொடங்கிவைக்கிறாா் என்றாா்.

பேட்டியின் போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை, சேலம் மாநகர மாவட்ட தலைவா் பாஸ்கா், துணை மேயா் மா.சாரதாதேவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com