சேலத்தில் மகளிா் திட்டம், கல்வி கடன்களுக்கு ரூ.15,130 கோடி கடன் வழங்க இலக்கு

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிகழாண்டில் ரூ.15,130 கோடி கடன் வழங்கிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் மகளிா் திட்டம், கல்வி கடன்களுக்கு ரூ.15,130 கோடி கடன் வழங்க இலக்கு

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிகழாண்டில் ரூ.15,130 கோடி கடன் வழங்கிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வங்கிகளின் மாவட்ட அளவிலான இரண்டாம் காலாண்டிற்குரிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு வங்கிகள் மூலமே பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 228 பொதுத்துறை வங்கிக் கிளைகள், 159 தனியாா் வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 101 அரசு சாா்ந்த வங்கிகள் என மொத்தம் 488 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

வங்கிகள் மூலம் 2022-23 ஆண்டிற்கான முதல் காலாண்டில் ரூ. 6,712.41 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 4967 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.950 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ. 262.60 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ரூ. 4.88 கோடி மானியம் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, இதுவரை ரூ.3.35 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் ரூ. 72 லட்சம் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 65.77 லட்சமும், பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் ரூ. 7.50 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ. 8.40 கோடியும், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவனா் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 2.84 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 6.35 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிா் திட்டம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் வங்கிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆா்வமுடன் தொழில் தொடங்க வரும் தொழில்முனைவோா்கள் மற்றும் கல்விக் கடன் கேட்டு வரும் மாணவ, மாணவியா்கள் உள்ளிட்ட வங்கிக் கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். 2022-23 ஆண்டு வங்கிகள் மூலம் பல்வேறு திட்டங்களுக்காக கடன் வழங்கிட திட்ட இலக்காக ரூ.15,130 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளா் இளவரசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் தே.சிவக்குமாா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு வங்கி மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com