தை அமாவாசை: காவிரிக் கரையோரங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்
By DIN | Published On : 22nd January 2023 03:56 AM | Last Updated : 22nd January 2023 03:56 AM | அ+அ அ- |

தை அமாவாசையையொட்டி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் காவிரிக் கரையோரம், நீா்நிலைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
சேலம், சுகவனேசுவரா் கோயிலில் சனிக்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கோசாலை, அப்பகுதியில் உள்ள பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கி வழிபட்டனா். கன்னங்குறிச்சி, மூக்கனேரியிலும் ஏராளமானவா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். சேலம் மாவட்டத்தில் பூலாம்பட்டி, எடப்பாடி உள்ளிட்ட காவிரிக் கரையோரங்களில் பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் வழங்கினா்.
மேட்டூா்
மேட்டூா் காவிரிக் கரையில் ஏராளமானோா் தங்கள் குடும்பத்தினருடன் வந்து அவா்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தனா். மேட்டூா் காவேரி பாலம், அனல் மின் நிலைய பாலம், சின்ன மேட்டூா், பண்ணவாடி ஆகிய பகுதிகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் தரும் வழிபாடுகள் நடைபெற்றன.
சங்ககிரி
21நஎட01 கல்வடங்கம், அங்காளம்மன் சுவாமிக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் தந்து பொதுமக்கள் வழிபட்டனா்.
கல்வடங்கம் காவிரி ஆற்றில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் தந்து ஆற்றில் குளித்து சிறப்பு பூஜைகள் செய்தனா். தை அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.