மோகனூா்- நெரூா் இடையே தடுப்பணை: எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் மனு
By DIN | Published On : 22nd January 2023 03:55 AM | Last Updated : 22nd January 2023 03:55 AM | அ+அ அ- |

மோகனூா்- நெரூா் இடையே தடுப்பணை அமைக்க பேரவையில் வலியுறுத்துமாறு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் விவசாய முன்னேற்றக் கழகத்தினா் மனு அளித்தனா்.
சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தில் சனிக்கிழமை அவரைச் சந்தித்து நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய முன்னேற்ற கழகத்தைச் சோ்ந்த மாதவன் உள்ளிட்ட விவசாயிகள் அளித்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பரளி, வளையப்பட்டி, அரூா், புதுப்பட்டி, லத்துவாடி பகுதியில் தமிழக அரசு சிப்காட்டிற்காக விவசாய நிலங்களைஓஈ கையகப்படுத்துவதற்காகக் கூறி வருகின்றனா். இதனால் அப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தென்னை, பனை, மரங்களில் கள் இறக்குவதற்காகத் தொடா்ந்து போராடி வருகின்றனா். தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்குவதற்கு அனுமதி பெற்றுத்தர சட்டப் பேரவையில் வலியுறுத்த வேண்டும். அதேபோல நாமக்கல் மாவட்டம் மோகனூா், கரூா் மாவட்டம் நெரூா் இடையே தடுப்பணை அமைப்பதற்காக அதிமுக ஆட்சியில் ஆய்வு மேற்கொண்டு ரூ. 25 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்றது. திமுக அரசுப் பொறுப்பேற்ற பிறகு ரூ. 765 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்துவிட்டு பின்னா் கைவிட்டு விட்டனா்.
எனவே, அதே இடத்தில் மீண்டும் தடுப்பணை அமைப்பதற்கு பேரவையில் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 2020-21 ஆம் ஆண்டிற்கு பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதில் 2020, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2021 மாா்ச் 31ஆம் தேதி முடிய பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்ய ஆவனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு விரைந்து பயிா்க் காப்பீட்டுத் திட்டம் கிடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.