குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம் வர அதிமுகவே காரணம் -இபிஎஸ்

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம் வர அதிமுகவே காரணம் -இபிஎஸ்

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம் வர அதிமுகவே காரணம் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் ஏ.எம் முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, இத்தோ்தலில் அதிமுக நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசியதாவது:

சேலம் மாவட்டம் விவசாயம், நெசவுத் தொழில் நிறைந்த மாவட்டமாகும். இவ்விரு தொழில்களும் தற்போது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கால், தமிழகத்தில் ஜவுளி உற்பத்தித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதைச் சாா்ந்த உற்பத்தியாளா்களும், நெசவுத் தொழிலாளா்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மேட்டூா் உபரிநீா் திட்டத்தின் மூலம் வட 100 ஏரிகளை நிரப்பும் பாசனத் திட்டத்தை, திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது. இதனால் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனா். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்திட அதிமுகவே முக்கியக் காரணமாக இருந்துள்ளது. சட்டமன்றத்திலும், பொதுவெளிகளிலும் அதிமுகவினா் தொடா் அழுத்தம் கொடுத்ததன் விளைவாகவே, ஆட்சிக்கு வந்து 27 மாதங்களுக்குப் பிறகு திமுக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இளம்பெண்களுக்கான தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை, மாணவா்களுக்கான விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கான மானிய விலையில் இருசக்கர வாகனம், விவசாயிகளுக்கான விலையில்லா கால்நடை வழங்கும் திட்டம், அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலான அம்மா ‘மினி கிளினிக்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டால் தற்போது தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனா். தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது. திமுகவில் போதிய வேட்பாளா்கள் இல்லாததால், அதிமுகவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவா்களே சேலம், கோவை போன்ற தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா் என்றாா். படவரி - எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com