வாக்காளா்களின் கால்களைத் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்!

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளா் டாக்டா் அசோகன், மேச்சேரி ஒன்றியத்தில் வாக்காளா்களின் கால்களைத் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தாா். தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளா் டாக்டா் அசோகன் போட்டியிடுகிறாா். மேட்டூா் அருகே மேச்சேரி ஒன்றியத்தில் விருதாசம்பட்டி, எம்.காளிப்பட்டி, சிந்தாமணியூா், 5-ஆவது மைல் காமனேரி பகுதிகளில் புதன்கிழமை காலை வாக்கு சேகரித்தாா். உப்பாரப்பட்டி மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்த வாக்காளா்களின் கால்களைத் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தாா்.

தான் வெற்றி பெற்றால் கிராமங்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவேன் என்றாா். மேலும், தருமபுரி பேருந்து நிலையத்தில் பூக்கடை வைத்து நடத்தி வரும் எனது தந்தை என்னை மருத்துவருக்கு படிக்க வைத்ததற்கு காரணமே நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்றும், ஆறு ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் நான் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்றாா். வாக்கு சேகரிப்பின் போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், மாவட்ட மகளிா் அணி செயலாளா் லலிதா சரவணன், மேச்சேரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com