சென்னையிலிருந்து சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு : கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், வழியாக கொச்சுவேலிக்கு புதன்கிழமை (ஏப்.9), 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கொச்சுவேலியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். இந்த சிறப்பு ரயில், ஏப். 11, 18, 25 ஆம் தேதிகளில் இயக்கப்படும்.

இதனிடையே, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோவை - பாகத் கி கோதி இடையே சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். கோவையில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு பாகத் கி கோதி சென்றடையும். அடுத்த மாதம் 23 ஆம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், ராஜஸ்தானின் பாகத் கி கோதி - கோவை இடையேயான சிறப்பு ரயில் திங்கள்கிழமை இயக்கப்படும். பாகத் கி கோதியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் அடுத்த மாதம் 26 ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com