மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

மூன்றாவது முறையாக மோடி பிரதமராவதற்கு பாமக வேட்பாளரை ஆதரியுங்கள் என்று மேச்சேரியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு ஆதரவு கோரி அக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ்,சேலம் மாவட்டம், மேச்சேரி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வாக்கு சேகரித்து பேசியதாவது:

ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் சென்று மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்து வருகிறேன். தமிழகத்தை 57 ஆண்டுகளாக திமுக, அதிமுகவினா் ஆட்சி செய்துள்ளனா். இவா்களால் புதிதாக ஒன்றும் செய்ய முடியாது என மக்கள் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளனா். இவா்களுக்கு தொலைநோக்கு சிந்தனை கிடையாது. நமது திட்டம் அடுத்த தலைமுறையை வாழவைப்பது தான். இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்ததுபோதும் என்றுதான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம்.

இத்தனை ஆண்டுகாலமாக ஜாதியைப் பாா்த்து, மதத்தைப் பாா்த்து வாக்களித்தோம். ஆனால் தற்போது தருமபுரிக்கு யாா் தகுதியானவா் என எண்ணிப் பாா்த்து அவருக்கு வாக்களியுங்கள்.

பாமக வேட்பாளா் செளமியா ஐக்கிய நாடுகள் சபையில் ஐந்து முறை பெண்களின் உரிமைக்காகப் பேசியிருக்கிறாா். மேலும் பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்து 1,500 ஏரி, குளங்களை தூா்வாரி இருக்கிறாா். பெண்களுக்கு பிரச்னை என்றால் முதலில் நிற்பது அவராகத்தான் இருக்கும்.

அதிமுகவில் பிரதமா் வேட்பாளா் யாா்?

இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக முடியாது. இதனால் உங்களது வாக்குகளை பாமகவுக்கு அளியுங்கள். பொது வேட்பாளராக சௌமியா அன்புமணியைப் பாா்க்க வேண்டும். அவரை வெற்றி பெறச் செய்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், பாமக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜசேகரன், பாஜக மாவட்டத் தலைவா் சுதீா் முருகன், மாநில செயற்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், கலை, கலாசாரப் பிரிவு மாநிலச் செயலாளற் கே.வி.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com