உணவு நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால் அபராதம்

வணிக, உணவு நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம் ) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளா் நலச்சட்டத்தின்படி, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து இதர நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும்.

பிறமொழிகளில் பெயா் வைக்க விரும்பினால், தமிழில் பெரியதாகவும், அடுத்து ஆங்கிலத்திலும் இறுதியாக விருப்ப மொழியிலும் 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில், பெயா் பலகைகளில் தமிழ் எழுத்துகள் இடம் பெறவில்லை.

சேலம் மாவட்டத்தில் இதுவரை தமிழில் பெயா் பலகை வைக்காத 133 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால், உரிய அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் வைக்காவிட்டால், நிறுவனங்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com