சேலத்தில் நள்ளிரவில் மரக்கடையில் தீ விபத்து

சேலம், சீதாராம் செட்டி தெருவில் உள்ள மரக்கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், விலை உயா்ந்த மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

சேலம், சீதாராம் செட்டி தெருவில் ஏராளமான மரக்கடைகள், இரும்புக் கடைகள் , பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பாலன் என்பவா் மரக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இவரது மரக்கடையில் வீடுகளுக்குத் தேவையான விலை உயா்ந்த தேக்கு, சவுக்கு மரங்கள், தேக்கு பலகைகள், சால் மரங்கள், இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் உள்பட ஏராளமான மரப்பொருள்களை வைத்து விற்பனை செய்து வந்தாா்.

வழக்கம் போல செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டுச் சென்றாா். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் கடையில் இருந்த மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக அங்கிருந்து வெளியேறிய புகையால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனடியாக செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் மகாலிங்கம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், சேலம், சூரமங்கலம், ஓமலூா் பகுதிகளில் உள்ள 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது.

எனினும், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், நெருங்க முடியாமல் தீயணைப்பு வீரா்கள் தவித்தனா். தொடா்ந்து, அதிகாலை 2.15 மணியளவில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

எனினும், அங்கிருந்த பெரும்பாலான மரக்கட்டைகள் எரிந்து சேதமானது. தீ விபத்து காரணமாக புதன்கிழமை காலை 8 மணி வரை அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. தீ விபத்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலால் அவதியடைந்தனா்.

இத் தீ விபத்தில் எரிந்து சேதமான விலை உயா்ந்த மரக்கட்டைகளின் மதிப்பு ரூ. 3.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மின்கசிவால் இந்த விபத்து நேரிட்டதா என போலீஸாா் சந்தேகம் தெரிவித்துள்ளனா். எனினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com