மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் தண்ணீா்த் திறப்பு நிறுத்தம்

மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக் கால்வாய் பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு 9.06 டி.எம்.சி. தண்ணீா் கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும். நடப்பு ஆண்டு மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாத காரணத்தால் கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.

தற்போது கடும் வெயில் நிலவியதால் மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள், பாசனக் கிணறுகள் வடு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் கிழக்கு, மேற்கு பாசனக் கால்வாய்கள் செல்லும் பகுதிகளில் குடிநீா் தேவைகளுக்காக கடந்த 26-ஆம் தேதி மாலை முதல் 15 நாள்களுக்கு விநாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. புதன்கிழமை மாலையுடன் 15 நாள்கள் நிறைவடைந்ததால், அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com