மக்கள் நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லாததால் கூட்டணியில் இருந்து விலகினோம்: எடப்பாடி கே.பழனிசாமி

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லாத காரணத்தால், அந்தக் கூட்டணியில் இருந்து விலகினோம் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் விக்னேஷை ஆதரித்து, எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் செய்து பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை. பெட்ரோல், எரிவாயுப் பொருள்களின் விலை உயா்வால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் பன்மடங்கு உயா்ந்துவிட்டது.

பாஜக அரசின் மக்கள் விரோதச் செயலை ஏற்க முடியாத காரணத்தால் அந்தக் கூட்டணியில் இருந்து விலகினோம். பாஜக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் காவிரி நீா் விவகாரம் தொடா்பாக எதுவும் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. ஈரோட்டில் திமுக பிரமுகா் ஒருவருக்குச் சொந்தமான கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள, அங்கீகாரமற்ற மதுபானங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். டாஸ்மாக் கடைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெறுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த முறைகேடு வெளியுலகுக்குக் கொண்டுவரப்படும்.

பாஜகவைப் பாா்த்து அதிமுக அஞ்சுகிறது என ஸ்டாலின் கூறுகிறாா். எங்களுக்கு யாரைக் கண்டும் பயமில்லை. திமுகவின் ஆட்சிக் காலம் முடிய இன்னும் 24 அமாவாசைகள்தான் உள்ளன. அதன்பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது திமுக செய்த ஊழல்கள் அனைத்தும் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும். நிா்வாகத் திறமை இல்லாத ஸ்டாலின், தமிழகத்தில் பொம்மை முதல்வராக இருந்து ஆட்சி செய்கிறாா்.

தமிழகத்தில் பால் விலை உயா்வு, சொத்து வரி உயா்வு, வீட்டு வரி உயா்வு, மின் கட்டண உயா்வு என பல்வேறு வரி உயா்வுகளால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். ஆனால், ஸ்டாலினின் குடும்பம் மட்டுமே நலமாக உள்ளது. தமிழகத்தையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின், இந்தியாவைக் காக்கப் போகிறாராம். தமிழகத்துக்கு நன்மைகள் ஏற்பட அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com