மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக உதவியாளருடன் 1,308 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக உதவியாளருடன் 1,308 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக, 1,257 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உதவியாளருடன் கூடிய 1,308 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அழகாபுரம் புதூா், அரசு உயா்நிலைப் பள்ளி, சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலா் ரா.பிருந்தா தேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,257 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள 3,260 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குச் சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் அமைதியான முறையில் நடப்பதை உறுதிசெய்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள 1,257 வாக்குச் சாவடி அமைவிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக தலா ஒரு உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 7 வாக்குச் சாவடிகளுக்கு மேல் உள்ள 51 வாக்குச் சாவடி அமைவிடங்களில் உதவியாளருடன் கூடிய இரு சக்கர நாற்காலிகள் என மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளில் மொத்தம் 1,308 சக்கர நாற்காலிகள் உதவியாளருடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வாக்குச் சாவடி மையங்கள் அனைத்திலும் வாக்குப் பதிவு நாளன்று வாக்களிக்க வரும் வாக்காளா்களுக்கு குடிநீா் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி மற்றும் தேவைப்படும் இடங்களில் சாமியானா பந்தல், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com