நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுங்கள்

வாக்காளா்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: மக்களவைப் பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்களிக்க வரும் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி மையங்களில் போதிய குடிநீா் வசதிகள், கழிப்பறை வசதிகள், கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தற்காலிக நிழல் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, வாக்காளா்கள் வாக்களிப்பதற்கான அடையாளச் சான்றாக வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை, வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்குப் புத்தகங்கள், ஓட்டுநா் உரிமம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்களில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் பணியாளா் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு, மத்திய அரசின் தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, மக்களவை, சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள், இயலாமைக்கான தனித்துவமான அட்டை என தோ்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வாக்காளா்களுக்கான அடையாளச் சான்றாகக் கொண்டு வாக்களிக்கலாம்.

மேலும், வாக்குச் சாவடி சீட்டு இல்லாத வாக்காளா்களும் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கலாம். வாக்குச் சாவடி சீட்டு வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும், வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது.

சேலம் மாவட்டத்தில் அமைதியான முறையில் தோ்தல் நடத்திட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, சேலம் மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com