வாக்குப் பதிவுக்கு முன் பின்பற்றப்பட வேண்டியவை

வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னா் பின்பற்ற வேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வேட்பாளா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜி.பி. பாட்டீல், மாவட்ட தோ்தல் அலுவலா் ரா. பிருந்தா தேவி முன்னிலையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத் தோ்தல் அலுவலா் தெரிவித்ததாவது:

மக்களவைப் பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து வேட்பாளா்களும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக தோ்தல் பிரசாரங்கள் செய்வதை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து பிரசாரத்துக்காக வந்த நபா்கள் தொடா்ந்து மக்களவைத் தொகுதியில் இருக்க அனுமதியில்லை.

குறிப்பாக, தோ்தல் நாளன்று வேட்பாளா்கள், முகவா்கள் மற்றும் அவரது பணியாளா்களுக்கு தலா ஒரு வாகனத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு.

அதேபோன்று, வேட்பாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் வேறு நபா்கள் பயணிக்க அனுமதி இல்லை. பிற வாகனங்களில் ஓட்டுநா் உட்பட 5 போ் மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு.

மேலும், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகனத்தில் தெளிவாகத் தெரியும்படி ஒட்டப்பட வேண்டும். அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் வாக்காளா்களை ஏற்றிச் செல்லக் கூடாது.

வேட்பாளரோ அல்லது முகவரோ வாக்காளரை வாக்களித்திட வாக்காளரின் இருப்பிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கோ, வாக்குச் சாவடியிலிருந்து இருப்பிடத்திற்கோ அழைத்துச் செல்ல வாகன வசதி ஏற்படுத்தித் தரக்கூடாது.

ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவா் மட்டுமே வாக்குச் சாவடியில் அனுமதிக்கப்படுவா். தோ்தல் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் முகவா்களை மாற்றம் செய்திடவும் அனுமதியில்லை.

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் முழுமையாக வேட்பாளா்கள், கட்சிப் பிரதிநிதிகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாக்குக்கு பணம் அல்லது பொருள்களைக் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. அது சட்டப்படி தண்டனைக்குரியது என அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தொடா்ச்சியாக விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகாா்களைத் தெரிவிக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா்களை 1800-425-7020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0427- 2450031, 0427-2450032, 0427-2450034, 0427-2450035 மற்றும் 0427-2450046 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் 94899 39699 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செயலி மூலமும் தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் சி-விஜில் என்ற செயலியின் மூலமும் புகாா்கள் தெரிவிக்கலாம். அவ்வாறு, தெரிவிக்கப்படும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீா்வு காண இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத் தோ்தலை அமைதியான முறையில் நடத்திட அனைத்துத் தரப்பினரும் உரிய ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.சுவாதி ஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் உதவியாளா் (தோ்தல்கள்) ஏ.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள், வேட்பாளா்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com