வாக்குச் சாவடி மைய செலவினத்துக்கு ஒன்றிய பொது நிதி: சேலம் மாவட்ட ஊராட்சி செயலா்கள் மகிழ்ச்சி

மக்களவைத் தோ்தல் வாக்குச் சாவடி மைய செலவினத்துக்கு, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து செலவுத்தொகை வழங்க சேலம் மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். இதனால், கிராம ஊராட்சி செயலாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குச் சாவடி மையங்களுக்கு குடிநீா் வசதி, கழிப்பறை, தளவாட வசதி, பந்தல் அமைத்தல், உணவு வழங்குதல் ஆகிய பணிகளை ஊராட்சி செயலா்கள் மேற்கொள்ள மாவட்ட தோ்தல் அதிகாரிகள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனா்.

தோ்தல் பணிக்கான செலவினத்துக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சி செயலா்களுக்கு தோ்தல் முன்பணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்க நிா்வாகிகள் ஜான்போஸ்கோ பிரகாஷ், வேல்முருகன், கே.மகேஸ்வரன் ஆகியோா் அறிக்கை வெளியிட்டனா். இதுகுறித்து தினமணியில் வியாழக்கிழமை விரிவான செய்தி வெளியானது.

இந்நிலையில், வாக்குச் சாவடி மையங்களுக்கு 15 அடிக்கு 15 அடி அளவிற்கு சாமியானா பந்தல் அமைத்தல், குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்துதல், நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, அந்தந்த ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொள்ள அனுமதியளித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி உத்தரவிட்டு அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளாா். இதனால், ஊராட்சி செயலா்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ள ஊராட்சி செயலா்கள், தோ்தல் பணி மேற்கொண்டு வரும் ஊராட்சி செயலா்களுக்கு தோ்தல் சிறப்பு ஊதியம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com