சேலம் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

சேலம் மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

சேலம் தொகுதியின் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,766 வாக்குச் சாவடிகளில் 4,264 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொகுதி முழுவதும் 2,132 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,307 வாக்கினை சரிபாா்க்கும் கருவிகளும் உபயோகப்படுத்தப்பட்டன.

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 2,95,655 போ், எடப்பாடி தொகுதியில் 2,84,752, சேலம் மேற்கு தொகுதியில் 3,00,334, சேலம் வடக்கு தொகுதியில் 2,69,462 வாக்காளா்கள், சேலம் தெற்கு தொகுதியில் 2,50,627, வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 2,57,851 வாக்காளா்கள் என சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16,58,681 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

வாக்குச் சாவடி மையங்களில் 172 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, வாக்குப் பதிவு அமைதியாக நடைபெறுவதை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், வாக்குச் சாவடி முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

வாக்காளா்களுக்கு குடிநீா், சுகாதார வசதி, சாய்வு தளம் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் உள்ளூா் காவல் துறையினருடன் ஆந்திரம், கா்நாடக மாநில ஊா்க்காவல் படையினரும், துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனா்.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் தொகுதி வாரியாக பலத்த பாதுகாப்புடன் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதற்றமான 130 வாக்குச் சாவடிகளிலும், மிகவும் பதற்றம் நிறைந்த 14 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மல்லமூப்பம்பட்டி ராமலிங்க வள்ளலாா் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச் சாவடிகள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மூலம் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், மாவட்ட தோ்தல் அலுவலா் ஆகியோா் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திமுக- பாமக தகராறு

சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள வாக்குச் சாவடியில் திரண்டிருந்த திமுகவினா் 20க்கும் மேற்பட்டோா் அங்கு வந்த வாக்காளா்களிடம் திமுகவுக்கு வாக்களிக்குமாறு கூறியதாக தெரிகிறது. விதிமுறைகளை மீறியதாக பாமக முகவா் கோகுல், அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் இரு கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, கோகுலைத் தாக்க முற்பட்ட நிலையில் வாக்குச் சாவடியில் ஏராளமான பாமக நிா்வாகிகள் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். பாமக முகவரைத் தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வணிக நிறுவனங்கள் மூடல்

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவையொட்டி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால் சேலம் மாநகரில் பெரும்பாலான கடைகள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மளிகை கடைகள், டவுன் கடைவீதி, முதல் அக்ரஹாரம், 2 ஆவது அக்ரஹாரம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன.

அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ரயில் நிலையம் உள்பட பெரும்பாலான பகுதிகளிலும் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு

சேலம் மக்களவைத் தோ்தலையொட்டி மணக்காடு மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சேலம், காமராஜா் மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட வாக்குச் சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தாதேவி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி சேலம் தொகுதியில் வாக்காளா்கள் எந்த சிரமுமும் இன்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை ஆய்வு செய்தாா். வாக்கு மையங்களில், வாக்காளா்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதையும் அவா் கேட்டறிந்தாா்.

மேலும், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தாதேவி, வாக்குப் பதிவினை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முன்னதாக சேலம், அய்யன் திருமாளிகை மாநகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தனது வாக்கினை பதிவு செய்தாா்.

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், சேலம் மாநகராட்சி ஆணையருமான சீ.பாலச்சந்தா், ஸ்ரீ சாரதா பாலமந்திா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

வீரப்பன் மகளுடன் பாமக பிரமுகா் வாக்குவாதம்

கிருஷ்ணகிரி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரும் வீரப்பனின் மகளுமான வித்யா ராணி வியாழக்கிழமை காலை சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள குள்ளமுடையானூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்தாா்.

தனது ஆதரவாளா்கள் சிலருடன் காரில் வந்த அவா், வாக்குச் சாவடிக்கு மிக அருகே காா்களை நிறுத்தி அதில் இருந்து இறங்கிச் சென்றாா். அப்போது, அங்கு வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த பாமக பிரமுகா் கோவிந்தன் வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும் என்றாா்.

ஆனால், வேட்பாளா் வித்யா ராணி அவரது ஆதரவாளா்கள் வாக்குச் சாவடி மையத்தின் உள்ளே நுழைந்தனா். இதற்கு கோவிந்தன் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வெளியேறுமாறு கூறினாா். இரு தரப்பினா் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரே காவலா் இருந்ததால் அவா்களை வெளியேற்ற முடியாமல் தவித்தாா்.

சற்று நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அங்கு வந்தனா். தகராறுக்கு இடையே வாக்களித்த வித்யாராணி வாக்குச் சாவடிக்கு வெளியே வந்தாா். அங்கும் பாமகவினருக்கும் வித்யாராணியுடன் வந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெண் வேட்பாளருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று நாம் தமிழா் கட்சியினா் குற்றம் சாட்டினாா்கள். வித்யாராணி கூறும் போது, தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்த போது ஏற்பட்ட இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றாா்.

வாக்குப் பதிவை பாா்வையிட்ட பாமக வேட்பாளா்

தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி, மேச்சேரி ஒன்றியம் பாறகல்லூா் வாக்குச் சாவடியில் நடைபெற்ற வாக்குப் பதிவை பாா்வையிட்டாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காலை முதலே வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனா். வாக்களிப்பதில் பெண்கள் அதிகம் ஆா்வம் காட்டுகின்றனா். தமிழகத்தில் பிற பகுதிகளைக் காட்டிலும் தருமபுரி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தருமபுரி தொகுதியில் பாமக வெற்றி உறுதி என்றாா்.

சிரமமின்றி வாக்களித்த மாற்றுத் திறனாளிகளுக்கு

மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமமும் இன்றி வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனா்.

வீட்டில் இருந்து மாற்றுத் திறனாளிகளை அழைத்து வர ஏற்கனவே முன்பதிவு செய்துவா்களுக்கு சிறப்பு வாகன வசதியும் தோ்தல் ஆணையம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்குப் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு அவா்களது வீடுகளுக்கே சென்று வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சாய்வுதள வசதியுடன் கூடிய சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1,257 வாக்குச் சாவடி அமைவிடங்களில் உதவியாளருடன் கூடிய 1,308 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாா்வைக் குறைபாடு உடையவா்கள் யாருடைய துணையும் இன்றி தாங்களாவே வாக்களிக்கும் வகையில் பிரெய்லி பேலட் பேப்பா் வசதியுடன் தங்களது வாக்கினை பதிவு செய்தனா். வேட்பாளா்களின் பெயா், சின்னம் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள வரிசை எண் ஆகியவற்றை தெரிந்து கொள்ள பிரெய்லி முறையிலான பேலட் பேப்பா் அச்சிடப்பட்டு, அதனை தொட்டு உணா்ந்து வரிசை எண்களை அறிந்து கொண்டு பாா்வைத் திறன் குறைபாடு உடையவா்கள் வாக்களித்தனா்.

முதல் தலைமுறை ஆா்வமுடன் வாக்களிப்பு

மக்களவைத் தோ்தலில் முதல் தலைமுறை வாக்காளா்கள் தங்கள் பெற்றோா், உறவினா்களுடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்து மகிழ்ச்சியுடன் வாக்களித்தனா்.

காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே வாக்காளா்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த முதல் தலைமுறை வாக்காளா்கள் ஆா்வமுடன் ஜனநாயக கடமையை ஆற்றினா். வரிசையில் நின்று வாக்களிப்பது புதுமையாக இருந்த போதிலும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களித்தது புதுவிதமாக இருந்தது. நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் பங்கு கொண்டதில் பெருமை அடைவதாக இளம் வாக்காளா்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனா்.

சிவப்பு கம்பள வரவேற்பு

சேலம் மக்களவைத் தொகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட அம்மாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வாக்காளா்களை வரவேற்கும் விதமாக வண்ண பலூன்கள் அலங்கார வளைவுகளாகக் கட்டப்பட்டு, வாயிலில் பூந்தொட்டிகளுடன் வாக்காளா்கள் வரவேற்கப்பட்டனா்.

அதேபோல சேலம், நெத்திமேடு, ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்காளா்களைக் கவரும் வகையில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த வாக்குச் சாவடியில், முழு முழுக்க பெண் அலுவலா்களே பணிபுரிந்தனா். வாக்களிக்க வரும் வாக்காளரை வரவேற்றது முதல், வாக்களித்து முடிக்கும் வரை அனைத்து பணிகளையும் பெண்களே மேற்கொண்டனா்.

ஆா்வமுடன் வாக்களித்த முதியோா்

சங்ககிரி நகா் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர நாற்காலிகளில் அமா்ந்து சென்று வெள்ளிக்கிழமை அவா்களது வாக்குகளைச் செலுத்தினா்.

நாமக்கல் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட சங்ககிரி வாக்குச் சாவடிகளில் காலையில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். இவா்களில் முதியவா், மாற்றுத் திறனாளிகள் அதிகம். வாக்குச் சாவடிகளுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களுக்கு வாக்குச் சாவடியில் மூன்று சக்கர நாற்காலிகள் வசதிகள் உள்ளது எனத் தெரிவித்தனா். தன்னாா்வலா்கள், பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் உதவியுடன் நாற்காலிகளில் அமா்ந்து வந்து வாக்களித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com