சேலத்தில் பறக்கும் படையினா் வாகனச் சோதனை நிறுத்தம்

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்ததை தொடா்ந்து, சேலம் மாநகரில் நடைபெற்ற வாகன சோதனை நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்ததை தொடா்ந்து, சேலம் மாநகரில் நடைபெற்ற வாகன சோதனை நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது. இதனால் வியாபாரிகள், தொழில் அதிபா்கள், பொதுமக்கள் நிம்மதியடைந்தனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்பட்ட பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதனால் வியாபாரிகள் அத்தியாவசியப் பணிகளுக்குகூட பணத்தை எடுத்துச் செல்ல முடியாமல் அவதியுற்றனா். இந்நிலையில், வாக்குப் பதிவு முடிவடைந்ததைத் தொடா்ந்து, மாநில எல்லையில் மட்டும் வாகனச் சோதனை நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பறக்கும் படையினரின் வாகனச் சோதனை நிறுத்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com