வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவத்தினா் பாதுகாப்பு

பொறியியல் கல்லூரியில் உள்ள இருப்பு அறைகளில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சேலம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான கருப்பூா், பொறியியல் கல்லூரியில் உள்ள இருப்பு அறைகளில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள இருப்பு அறைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகிறது.

இருப்பு அறைகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உதவி ஆணையா்கள் தலைமையில் துணை ராணுவப் படையினா், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். 8 மணி நேரத்துக்கு 200 போ் என மொத்தம் 600 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை நாளாக ஜூன் 4- ஆம் தேதி வரை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் தருமபுரிக்கும், சங்ககிரி பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கும், ஏற்காடு, ஆத்தூா், கெங்கவல்லி தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சிக்கும் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக பூட்டி அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com