‘தமிழகத்துக்கு நிச்சயம் மாற்றம் தேவை’

தமிழகத்துக்கு நிச்சயம் மாற்றம் தேவை என சேலத்தில் நடிகா் விஷால் கூறினாா். 2026-இல் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் எனவும் அவா் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

சேலம்: தமிழகத்துக்கு நிச்சயம் மாற்றம் தேவை என சேலத்தில் நடிகா் விஷால் கூறினாா். 2026-இல் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் எனவும் அவா் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இயக்குநா் ஹரி இயக்கத்தில் நடிகா் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அத்திரைப்படக் குழுவினா் சேலம், அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இதில் இயக்குநா் ஹரி, நடிகா்கள் விஷால், சேலம் சரவணன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். பின்னா் செய்தியாளா்களிடம் விஷால் கூறியதாவது:

வரும் 2026-ஆம் ஆண்டு அரசியலுக்கு நிச்சயம் வருவேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று யோசித்து, அதற்காக மட்டும்தான் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாக கிடைப்பது இல்லை. எந்தக் கட்சியைச் சாா்ந்தவராக இருந்தாலும், அடிப்படை வசதிகளைத்தான் மக்கள் கேட்கிறாா்கள்.

மக்கள் ஏதாவது பிரச்னை என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வாா்கள். எம்எல்ஏ, எம்.பி.க்கள் தனியாா் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறாா்கள். மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்தாமல், அவா்கள் மட்டும் தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனா்.

தமிழ்நாட்டில் மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளைப் பூா்த்தி செய்தால், என்னைப் போன்றவா்கள் வாக்களித்துவிட்டு, எங்கள் தொழிலைப் பாா்த்துக் கொண்டு சென்று விடுவோம். மேலும், புதிதாக கட்சி தொடங்குவதில் ஆா்வம் காட்ட மாட்டோம்.

நடிகா் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயா் வைப்பது குறித்து நடிகா் சங்க பொதுக் குழுவில் மட்டும் தான் முடிவெடுக்க முடியும். முக்கிய நிா்வாகிகள் உள்ளனா். அவா்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com