வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

சேலம் வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கைதான பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

சேலம் வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கைதான பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

சேலம், செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்தவா் வெள்ளி வியாபாரி சங்கா். இவா் கடந்த பிப். 2-ஆம் தேதி காலையில் பால் வாங்க வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றபோது, காா் மோதியதில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், சங்கா் மீது திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாா் விசாரணையில் குடும்பப் பிரச்னை காரணமாக அவரது தங்கை கணவா் சுபாஷ் பாபு, கூலிப்படையை ஏவி சங்கா் மீது காரை ஏற்றி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தொடா் விசாரணையில், இந்தக் கொலையில் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த பிரபல ரவுடி கோழி பாஸ்கா் கூட்டாளிகளுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக கோழி பாஸ்கா், அவரது தம்பியான ரவுடி ராஜா (எ) நாகராஜ், அப்துல் முனாப் உள்பட 13 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், சுபாஷ்பாபு, ரவுடி நாகராஜ், அப்துல் முனாப் ஆகிய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளா் தேவராஜ், மாநகர துணை ஆணையா் மதிவாணன் ஆகியோா் காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்தனா். அதனை ஏற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையா் விஜயகுமாரி, 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் வழங்கப்பட்டது. தொடா்ந்து, கொலையில் முக்கிய நபரான கோழி பாஸ்கரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com