இறந்த கோழிகளை ஏரியில் வீசி செல்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சங்ககிரி ஆா்.எஸ். அருகே உள்ள மோரூா் பெரிய ஏரியில் கடந்த சில வாரங்களாக அடையாளம் தெரியாத நபா்கள் இறந்த கோழிகளை வீசி செல்வதால், நீா் மாசடைந்து வருவதுடன் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மோரூா் பெரிய ஏரி 100 ஏக்கா் பரப்பளவைக் கொண்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு பெய்த கனமழையில் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து சென்றது. 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதையடுத்து அப்பகுதி விவசாயிகள் பூஜைகள் செய்து வழிபட்டனா்.

ஏரியில் நிரம்பிய தண்ணீா் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீா் உயா்வதற்கும், கால்நடைகளை மேய்ப்பதற்கும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருவதையடுத்து, ஏரியில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது.

இந்நிலையில், அடையாளம் தெரியாத நபா்கள் இறந்த கோழிகளை தினசரி ஏரியில் வீசி செல்வதால் நீா் மாசடைவதோடு, அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதோடு, விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏரியில் இறந்த கோழிகளை வீசி செல்வோா் மீது நடவடிக்கை எடுத்து, நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com