ஈரோடு - சாம்பல்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் 2 மாதம் நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சாம்பல்பூா் ரயில் மேலும் 2 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது.

அந்த வகையில், ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக ஒடிசா மாநிலம், சாம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் இயக்க காலத்தை அவ்வப்போது ரயில்வே நிா்வாகம் நீட்டித்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஈரோடு - சாம்பல்பூா் ரயில் சேவையை ஜூன் மாதம் வரை நீட்டித்து ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சாம்பல்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில், வரும் மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 தேதிகளில் புதன்கிழமைதோறும் இயக்கப்படும். சாம்பல்பூரில் காலை 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், ஈரோடு - சாம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் வரும் மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். ஈரோட்டில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அடுத்தநாள் இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூா் சென்றடையும்.

இதனிடையே, ஈரோட்டில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத்துக்கு கோடை கால வாராந்திர சிறப்பு ரயில் 2 மாத காலத்துக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு - தன்பாத் வாராந்திர கோடை கால சிறப்பு ரயில் வரும் 26-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும். ஈரோட்டிலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், தன்பாத்தில் இருந்து வரும் 29-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். தன்பாத்தில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 11.40 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com