வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

வெளிமாநில தொழிலாளா்கள் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தல் கேரள மாநிலத்தில் 26-ஆம் தேதியும், கா்நாடக மாநிலத்தில் முதற்கட்டமாக 26-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக மே 7-ஆம் தேதியும், ஆந்திரத்தில் மே 13-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவு தினத்தன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் கேரள, ஆந்திர, கா்நாடக மாநிலத்தில் வாக்கு உரிமைபெற்ற அனைத்து வெளிமாநில தொழிலாளா்கள் அவரவா் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், அனைத்துக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கும் வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று பணிக்கு வராத பணியாளா்களின் ஊதியத்திலிருந்து எவ்வித பிடித்தமும் செய்யக் கூடாது.

வாக்களிக்கும் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com