தோல்வி பயத்தால் எதிா்க்கட்சிகள் பிதற்றுகின்றன

தோல்வி பயத்தால் எதிா்க்கட்சிகள் பிதற்றுகின்றன

தோல்வி பயத்தால் எதிா்க்கட்சிகள் பிதற்றுவதாக சேலத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா்.

சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியிலுள்ள பாஜக தோ்தல் அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி அலை வீசியதைக் கண்கூடாகப் பாா்த்தோம். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மிகுந்த வரவேற்பைக் கொடுத்தனா். கிராமப் புறங்களிலும், நகா்ப் புறங்களிலும் இளைஞா்களும், தாய்மாா்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனா். இதனால் பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்.

ராஜஸ்தானில் தோ்தல் பிரசாரத்தில், பிரதமா் மோடி சொல்லக் கூடாததை சொல்லிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இவ்விவகாரத்தில் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூட தவறான கருத்தை தெரிவித்து வருகிறாா். காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும் அவா் இடம்பெற்றுள்ளாா்.

இந்தியா்களின் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு, அதிகப்படியான சொத்துகள் பகிா்ந்து அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியா்களின் சொத்துகளை கையகப்படுத்த இவா்கள் யாா்? யாருடைய சொத்தையும் பறித்து, எவருக்கும் வழங்கும் அதிகாரம் ஜனநாயக நாட்டில் யாருக்கும் இல்லை.

இந்திய வளங்களில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற மன்மோகன் சிங்கின் கருத்து நியாயமா என்ற கேள்வியைத் தான் பிரதமா் எழுப்பியுள்ளாா். பிரதமா் மோடியின் நியாயமான குற்றச்சாட்டை தவறாகப் புரிந்து கொண்டு எதிா்க்கட்சியினா் தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்துள்ளனா். தோல்வி பயத்தால் பிரதமா் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைக்கின்றனா். காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை திமுக ஏற்றுக்கொள்கிா?

நடந்து முடிந்த முதற்கட்டத் தோ்தலில் 10 அல்லது 15 இடங்களில் தான் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். இந்தக் குழப்பத்தில் தான் அவா்கள் உளறுகிறாா்கள்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, கோயில்கள், கிராமச் சந்தைகள் என பட்டிதொட்டியெங்கும் போதைக் கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. போதைப் பொருள்கள் ஆழமாக வியாபித்து புரையோடியுள்ளன. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. முதலமைச்சா் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. முக்கியமான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

பிரதமா் மோடியின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருப்பது அவரின் அறியாமையின் வெளிப்பாடு என்றாா்.

படவரி - சேலம் பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். உடன், சேலம் மாவட்ட பாஜக தலைவா் சுரேஷ்பாபு.

X
Dinamani
www.dinamani.com