சேலம் காந்தி மைதானத்தில்
நீச்சல் குளம் புனரமைக்கும் பணி தீவிரம்

சேலம் காந்தி மைதானத்தில் நீச்சல் குளம் புனரமைக்கும் பணி தீவிரம்

சேலம், அண்ணா பூங்கா அருகே உள்ள அரசு நீச்சல் குளத்தை வெள்ளிக்கிழமை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

சேலம், ஏப். 26: சேலம் காந்தி மைதானத்தில் நீச்சல் குள புனரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சேலம் மாநகரின் மையப் பகுதியில் அண்ணா பூங்கா அருகில், காந்தி விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நீச்சல் குளத்தில் விடுமுறை நாள்களில் நீச்சல் பயில பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனா். அவா்களுக்கு பயிற்சியாளா்கள் நீச்சல் பயிற்சி அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், நீச்சல் குளத்தின் டைல்ஸ் கற்கள், பக்கவாட்டு சுவா்கள் சேதமடைந்து காணப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், ரூ. 18 லட்சம் நிதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது நீச்சல் குளத்தில் சேதமடைந்த பழைய டைல்ஸ் கற்கள் அகற்றப்பட்டு, புதிய டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மேலும், சேதமடைந்த மின் மோட்டாா்கள், கழிவறைகள், துணி மாற்றும் அறைகள் என அனைத்தும் சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நீச்சல் உள்ளிட்ட பயனுள்ள கலைகளைக் சுற்றுக்கொள்ள மாணவா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். எனவே, மாணவா்களின் நலன் கருதி, நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com