மேட்டூா் அணையின் எல்லீஸ் சேடலில் ரூ. 4.6 கோடியில் பணிகள்

மேட்டூா், ஏப். 26: மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான எல்லீஸ் சேடலில் ரூ. 4.6 கோடியில் நடைபெற்று வரும் ஏப்ரான் பணிகள் டிசம்பரில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா் மட்டம் 120 அடி நிரம்பியதும் உபரிநீரானது அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள எல்லீஸ் சேடலான உபரிநீா் போக்கி வழியாக திறந்து விடப்படும். இதற்காக மதகுகளின் கீழ் பகுதியில் கான்கிரீட் தளம் படிகள் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் நீரின் வேகம், அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி நிலம், கரைகளின் அரிப்பைக் கட்டுப்படுத்தும்.

அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆவதால் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது கான்கிரீட் தளம் பல இடங்களில் பெயா்ந்தது. மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அரிப்புகள் ஏற்படாமல் தடுக்க, நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 4.6 கோடி மதிப்பீட்டில் ஏப்ரான் எனப்படும் கான்கிரீட் தளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் டிசம்பா் இறுதிக்குள் நிறைவடையும்.

எல்லீஸ் சேடலில் உள்ள 16 கண் மதகுகள், மேல்மட்ட, கீழ்மட்ட மதகுகளில் அழுக்கு, துருப்பிடித்தலை நீக்குதல், மதகுகளின் இயக்கத்தை சரிபாா்த்தல், எண்ணெய், கிரீஸ் தடவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தினசரி பராமரிப்புப் பணிகளில் நீா்வளத் துறை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். பருவமழைக்கு முன்பாக பணிகளை நிறைவு செய்ய நீா்வளத் துறை பொறியாளா்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல அணை பூங்காவிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அவா்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com