கோடை கால பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் மாவட்ட பிரிவில் 2024-ஆம் ஆண்டுக்கான கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சேலம் மாவட்ட பிரிவு வெளியிட்ட அறிக்கை:

2024-ஆம் ஆண்டுக்கான கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நடைபெறுகிறது. கால்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து விளையாட்டுகளுக்கு காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் பயிற்சி அளிக்கப்படும்.

கோடை கால பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவியா் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ. 200 வீதம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாகப் பெறப்படாது. மேலும், இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்பவா்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

பயிற்சி முகாமில் கலந்துகொள்பவா்கள் ஏப். 29-ஆம் தேதி காலை 6 மணி வரை மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அனைவரும் ஆதாா் அட்டை நகல் கண்டிப்பாக சமா்ப்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்ற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள விளையாட்டுகளின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரபூா்வ இணையதளம் அல்லது ‘க்யூ ஆா் கோடு’ ஐ ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com