விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவா் வினோத்தின் உடல் உறுப்பு சேலம், அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவரது உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்திய அரசு மருத்துவமனை முதன்மையா் மணி.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவா் வினோத்தின் உடல் உறுப்பு சேலம், அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவரது உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்திய அரசு மருத்துவமனை முதன்மையா் மணி.

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

இருசக்கர வாகனம் மோதி சேலம் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவா் வினோத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கராயபாளையம், பழைய காலனியைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவருக்கு பிரியதா்ஷினி (20) என்ற மகளும், விக்னேஷ் (18), வினோத் (14) என்ற மகன்களும் உள்ளனா். இதில், வினோத் அங்குள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த 24ஆம் தேதி கொங்கராயபாளையத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்ற வினோத், அங்கு பணம் எடுத்துவிட்டு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வினோத் மீது வேகமாக மோதியது.

இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த வினோத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம், அரசு மருத்துவமனையில் மாணவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த வினோத், சனிக்கிழமை மாலை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, வினோத்தின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோா் முன்வந்தனா். தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்களது உத்தரவின்பேரில், சேலம் வந்த சென்னை, கோவை, மதுரையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா், மூளைச்சாவு அடைந்த வினோத்தின் இருதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்களை தானமாக எடுத்துச் சென்றனா்.

தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குபவா்களின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் அரசு கல்லூரி மருத்துவமனை முதல்வா் மணி, மருத்துவா்கள் அரசு சாா்பில் வினோத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், ‘சேலம் அரசு மருத்துவமனையில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 18 வயதுக்கு குறைவான முதல் உடல் உறுப்பு தானமாக வினோத்தின் அறுவை சிகிச்சை அமைந்தது’ என்றாா்.

உயிரிழந்த வினோத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை 14 ஆவது பிறந்த நாளாகும். இதைக் கூறி அவரது பெற்றோா், உறவினா்கள் கதறி அழுதது, அங்கிருந்தவா்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com