சேலத்தில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் தொடக்கம்

சேலம் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கேரம் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

சேலம்: சேலம் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கேரம் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

சேலம் மாவட்ட கேரம் கழகம் மற்றும் சேலம் ஒய்.எம்.சி.ஏ. இணைந்து மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகின்றன. இதன் தொடக்க விழா, சேலம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு கேரம் கழகத் தலைவரும், சேலம் மாவட்ட கேரம் கழகத்தின் தலைவருமான நாசா்கான் (எ) அமான் தலைமை வகித்தாா். தொடா்ந்து, மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளை சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கேரம் போட்டியில், 11, 14, 17, 19 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கும், 19 வயதுக்கு உள்பட்ட பொது பிரிவினருக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் நடைபெறும் இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரா் - வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரா், வீராங்கனைகள் வரும் மே மாதம் சிவகாசியில் தமிழ்நாடு கேரம் கழகம் சாா்பில் நடக்கும் 65ஆவது ஜூனியா் மற்றும் யூத் மாநில கேரம் போட்டிகளில் பங்கேற்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com