வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகம் இடமாற்றம்

வாழப்பாடியில் பத்திரப்பதிவு அலுவலக கட்டடம் அகற்றப்பட்டு, ரூ.1.65 கோடியில் புதிய கட்டம் அமைக்கப்படுகிறது.

வாழப்பாடி: வாழப்பாடியில் பத்திரப்பதிவு அலுவலக கட்டடம் அகற்றப்பட்டு, ரூ.1.65 கோடியில் புதிய கட்டம் அமைக்கப்படுகிறது. இதனால், பத்திரப் பதிவு அலுவலகம் தனியாா் வாடகைக் கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

127 ஆண்டு பழமையான வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலக கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறைந்ததாலும், இக்கட்டடத்தில் தற்காலத்திற்கு ஏற்ற நவீன வசதிகள் இல்லாததாலும் புதிய கட்டடம் அமைக்க பத்திரப் பதிவுத் துறை முடிவு செய்து, ரூ.1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. நிலத்தை அளவீடு செய்து திட்ட முன்வரைவு தயாரித்து, பழையக் கட்டடத்தை அப்புறப்படுத்தி, புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.

இதனால், வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகம் வாழப்பாடி- தம்மம்பட்டி பிரதான சாலை மகேஸ்வரி திரையரங்கிற்கு பின்புறமுள்ள தனியாா் வாடகை கட்டடத்திற்கு தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், புதிய கட்டடத்திற்கு மாற்ற பத்திரப்பதிவுத்துறை திட்டமிட்டுள்ளது.

பழமையான வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பழைமையான அசோகா, வில்வம், வேம்பு உள்ளிட்ட 10 மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பொதுமக்களுக்கு நிழல் தந்து வருகிறது.

புதிய கட்டடம் அமைக்கும் போது, பழமையான மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும். மரங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திட்டமிட்டு, கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பசுமை ஆா்வலா்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com