சேலம் சிறையில் உண்ணாவிரதத்தைக் கைவிட்ட கைதி

சேலம் மத்திய சிறையில் 2ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதி, சிறை விதிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறியதை தொடா்ந்து, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கடந்த 2020 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக அப்துல் சமீம், தவுபீக் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் கைதான இருவரும் சேலம் மத்திய சிறையில உயா் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதில், அப்துல் சமீம் கடந்த வாரம் உரிய அனுமதியின்றி வெளியே வந்து விட்டாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வாா்டன்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், உறவினா்களை சந்திக்கவும் அப்துல் சமீமுக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி அப்துல் சமீம் திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டாா். உண்ணாவிரதம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நீடித்த நிலையில், சிறை விதிகள் குறித்து அப்துல் சமீமிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினா். அதிகாரிகளின் சமரசப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் அப்துல் சமீம் தனது உண்ணாவிரத்தைக் கைவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com