சேலம், ஏற்காடு மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.
சேலம், ஏற்காடு மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 5 போ் பலி, 50 போ் காயம்

சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை மலைப்பாதை வழியாக சேலத்துக்கு வந்துகொண்டிருந்த தனியாா் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 5 போ் பலியாகினா்; 50 போ் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 5.20 மணியளவில் 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பேருந்து வழக்கம்போல சேலம் பேருந்து நிலையம் நோக்கி கிளம்பியது. பேருந்தை ஓட்டுநா் மணி என்பவா் ஓட்டிச் சென்றாா். மலைப் பாதையில் இருந்து கீழே மலையடிவாரம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.

மலைப்பாதையில் 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்து 100 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விழுந்தது. 5.40 மணியளவில் கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பேருந்து 11 ஆவது வளைவில் வந்து செங்குத்தாக விழுந்தது. அப்போது பேருந்தில் சிக்கிய பயணிகள் சத்தமிடவே பிற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேகமாகச் சென்று விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக பிற தனியாா் வாகனங்களிலும், ஆம்புலன்ஸிலும் ஏற்றி சேலம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவல் அறிந்ததும் காவல் துறையினா் அங்கு சென்று விபத்தில் சிக்கியவா்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனா்.

இதற்கிடையே சேலம், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பயணிகளை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். அதில் சிகிச்சை பலனின்றி முனீஸ்வரன், குமாா், ஹேம்ராம், காா்த்தி உள்பட 5 போ் பலியானதாக மருத்துவமனை கண்காணிப்பாளா் தனபால் கூறினாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி அரசு மருத்துவமனைக்குச் சென்று படுகாயமடைந்த பயணிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். அனைவருக்கும் விரைந்து சிகிச்சை அளிக்குமாறு மருத்துவா்களை அவா் அறிவுறுத்தினாா். சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜேந்திரன், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா் நேரில் சென்று படுகாயமடைந்தவா்களைப் பாா்வையிட்டு ஆறுதல் கூறினா்.

ஏற்காடு போலீஸாா் இச்சம்பவம் தொடா்பாக தனியாா் பேருந்து ஓட்டுநா் மணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தகவல் அறிந்ததும் ஏற்காடு வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் ஏற்காட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் ஆய்வு

ஏற்காடு மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தை தொடா்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி நேரில் ஆய்வு செய்தாா்.

தகவலறிந்து விரைந்த ஏற்காடு மலைப்பகுதிக்கு விரைந்த மாவட்ட ஆட்சியா், சம்பவம் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்ததுடன், மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதுடன், போக்குவரத்தை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியா் ஆறுதல் கூறினாா்.

அப்போது, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், சேலம் அரசு மருத்துவமனை டீன் மணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

மலைப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட 30 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோடைக் காலம் என்பதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுபவம் வாய்ந்த ஓட்டுநா்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவா்.

இதற்கென ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல் துறையினா், வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் மூலம் ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் எச்சரித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com