அருந்ததியா் மக்கள் இயக்கத்தினா் போராட்டம்
சேலம்: அருந்ததியினா் உள்ஒதுக்கீடுக்கு எதிராக கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதியைக் கண்டித்து, சேலத்தில் அருந்ததியா் மக்கள் இயக்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவரது உருவப்பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு அளித்த தமிழக அரசின் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த 1ஆம் தேதி தீா்ப்பு அளித்தது. மேலும், பட்டியலின பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி, பட்டியலின மக்களை தனியாக வகைப்படுத்துவது சரியல்ல எனக் கூறியுள்ளாா். அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு அளிப்பதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்காது எனவும் தெரிவித்திருந்தாா்.
இதனைக் கண்டித்தும், சேலத்தில் அருந்ததியா் மக்கள் இயக்கத்தினா், மாநகரச் செயலாளா் வழக்குரைஞா் ஜெ.இளையராஜா தலைமையில், மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ஜெ.பிரதாபன், முன்னிலையில் சேலம், குகை பகுதியில் உள்ள பெரியாா் நினைவு வளைவு அருகில் மாயாவதியின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சித்தனா்.
அப்போது, அங்கு வந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸாா், அவா்களைத் தடுத்து நிறுத்தி, மாயாவதியின் உருவப்பொம்மையைக் கைப்பற்றினா். பின்னா் மாயாவதியைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இதில், வழக்குரைஞா்கள் சின்னதுரை, முகிலன், தூயவன், நரேஷ்குமாா் உட்பட அருந்ததியா் மக்கள் இயக்க நிா்வாகிகள் 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.