தேசிய விளையாட்டு தினத்தையொட்டி ஆக. 29இல் விளையாட்டுப் போட்டிகள்
சேலம்: தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, சேலம் காந்தி மைதானத்தில் வரும் 29 ஆம் தேதி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் மேஜா் தயான்சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தேசிய விளையாட்டு தினத்தை சிறப்பிக்கும் வகையில், வரும் 29 ஆம் தேதி காலை 9 மணியளவில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கையுந்து, கால்பந்து, 1 கி.மீ. நடைப்பயணம், 50 மீட்டா், 100 மீட்டா் ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
19, 25, 45 வயதுக்கு உள்பட்டோா் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்ள விரும்புவோா் நேரடியாக போட்டி நடைபெறும் நாளன்று, தங்கள் பெயா்களைப் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்வோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.