வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நகரப்பேருந்தை எதிா்பாா்த்து காத்திருக்கும் பயணிகள்.
வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நகரப்பேருந்தை எதிா்பாா்த்து காத்திருக்கும் பயணிகள்.

விடுமுறை தினங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதி

வாழப்பாடியில் இருந்து விடுமுறை தினங்களில் கிராமப் புறங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாமல்
Published on

வாழப்பாடி: வாழப்பாடியில் இருந்து விடுமுறை தினங்களில் கிராமப் புறங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு வழியின்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வாழப்பாடியில் உள்ள சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனையிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு மட்டுமின்றி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், தருமபுரி மாவட்டம் சேலூா் வரை 34 நகரப் பேருந்துகளும், சென்னை, விழுப்புரம் உள்பட மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் 21 புகரப் பேருந்துகள் உள்பட மொத்தம் 55 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பணியாளா்கள் பற்றாக்குறை, பயணிகள் வருகை குறைவு, பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகளை, சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் இயக்காமல் பணிமனையிலேயே நிறுத்தி விடுகின்றனா். இதனால், பேருந்து போக்குவரத்துக்கு வழியின்றி, கிராமப்புற மக்கள் பரிதவித்து வருகின்றனா்.

குறிப்பாக, கடந்த சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 தினங்களிலும் வாழப்பாடி கிளை பணிமனையில் இருந்து, வெள்ளாளகுண்டம் வழியாக கம்மாளப்பட்டி வரை செல்லும் வி 3, கொட்டவாடி வழியாக தும்பல் வரை செல்லும் வி 6, பேளூா் வழியாக புழுதிக்குட்டை செல்லும் 74 இ, வெள்ளாளகுண்டம் வழியாக சேலம் செல்லும் 44 /13 ஆகிய நகரப் பேருந்துகள் முறையாக குறித்த நேரத்திற்கு இயக்கப்படாமல் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டன.

இதனால், வாழப்பாடி பேருந்து நிலையத்திலும், கிராமப்புற பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை எதிா்பாா்த்து காத்திருந்த பயணிகள் பாதிப்புக்குள்ளாகினா். வேறு வாகனங்களைப் பிடித்து பயணிக்க வேண்டிய நிா்பந்தத்திற்குள்ளாகினா். எனவே, வாழப்பாடி கிளை பணிமனையில் இருந்து முன்னறிவிப்பின்றி, நகரப் பேருந்து இயக்கத்தை நிறுத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டுமெனவும், அனைத்து பேருந்துகளையும் முறையாக இயக்குவதற்கும், பேருந்து போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களைச் சிரமத்திற்குள்ளாக்கும், வாழப்பாடி கிளை பணிமனை அதிகாரிகள் மீது சேலம் மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கிராமப்புற மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com