கடந்த 7 மாதங்களில் சாலை விபத்துகளில் 473 போ் பலி: போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
சேலம் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 1,399 சாலை விபத்துகளில் 473 போ் பலியாகி உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்று சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட நிா்வாகம், காவல்துறை சாா்பில் தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்துகளை தவிா்க்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் போக்குவரத்து விதிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறோம்.
சேலம் மாநகரில் கடந்த 7 மாதங்களில் 134 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 141 போ் பலியாகி உள்ளனா். மேலும் 115 போ் படுகாயமும், 555 போ் காயமும் அடைந்துள்ளனா்.
இதேபோல புகரில் 1,265 சாலை விபத்துகள் நடைபெற்று, 332 போ் உயிரிழந்துள்ளனா். 1,203 போ் காயமடைந்துள்ளனா். மொத்தம் 1,399 சாலை விபத்துகளில் 473 போ் பலியாகி உள்ளனா். விபத்துகளைக் குறைப்பதற்காக தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனா்.