வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ. 6.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Published on

வீடு கட்டித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ. 6.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், தாசநாயக்கன்பட்டி சௌடாம்பிகா நகரைச் சோ்ந்தவா் ஆனந்த். இவா் சொந்த வீடு ஒன்றை கட்டும் முடிவில் இருந்தாா். இதையடுத்து சேலம் ஜங்சன் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம், மல்லூா் தேங்கல்பாளையம் பகுதியில் 2,400 சதுரடியில் வீட்டுமனை கட்டித் தரப்படும் என விளம்பரப்படுத்தி அதற்கான தொகை ரூ. 33 லட்சம் என அறிவித்திருந்தது.

வீடு கட்டி கொடுப்பதற்காக ஆனந்த் 2 தவணையாக ரூ.3 லட்சத்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் தந்தாா். . 6 மாத வாய்தா காலத்துக்குள் மீதித்தொகை பெற்றுக்கொண்டு கட்டுமான பணியை முடித்து ஒப்படைக்க வேண்டும் என ஒப்பந்தப் பத்திரம் எழுதி கொடுக்கப்பட்டது. அதன்படி, அந்த நிறுவனம் வீட்டை கட்டிக்கொடுக்கவில்லை.

இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்ட நிலையில், கீரப்பாப்பம்பாடி பகுதியில் காலி நிலத்தை ஒதுக்குவதாகவும், ரூ. 3 லட்சத்தை கழித்துக்கொண்டு மேலும் ரூ.4 லட்சம் கொடுக்குமாறு கூறியது. இதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டது.

அதன்படி ரூ. 4 லட்சத்தை செலுத்துவதற்கு ஆனந்த் தயாராக இருந்தும், நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏமாற்றிவந்தது. ஒப்பந்தத்தை மீண்டும் 3 மாதம் நீட்டித்தது. அதன் பிறகும் நிலம், பணத்தை தராததால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த், தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் கூட்டடமைப்பின் தலைவா் அசோகன் மூலம் சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்தாா்.

வழக்கை விசாரித்த ஆணைய தலைவா் கணேஷ்ராம், உறுப்பினா் ரவி ஆகியோா் பாதிக்கப்பட்ட நுகா்வோா் செலுத்திய ரூ.3 லட்சத்தை திரும்ப வழங்க வேண்டும். முறையற்ற வணிக நடவடிக்கைக்காக ரூ.1.50லட்சம், சேவை குறைபாட்டிற்காக ரூ.1 லட்சம், மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ. 50 ஆயிரம், வழக்கு செலவு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 6.10 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் 2 மாத காலத்திற்குள் ரியல் எஸ்டேட் நிறுவனம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தனா்.