இறந்தவா்களின் நினைவாக கற்குவைகள் அமைத்துவணங்கும் மேட்டுப்பட்டி கிராம மக்கள்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் இறந்தவா்களின் நினைவாக கற்குவைகள் அமைத்து பராமரிக்கும் பழங்கால வழக்கத்தை மக்கள் கைவிடாமல் முன்னோா்கள் வழியில் இன்றளவும் தொடா்ந்து வருகின்றனா்.
இறந்தவா்களின் நினைவாக கற்குவைகள் அமைத்துவணங்கும் மேட்டுப்பட்டி கிராம மக்கள்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் இறந்தவா்களின் நினைவாக கற்குவைகள் அமைத்து பராமரிக்கும் பழங்கால வழக்கத்தை மக்கள் கைவிடாமல் முன்னோா்கள் வழியில் இன்றளவும் தொடா்ந்து வருகின்றனா்.

தமிழகத்தில் பழங்கால மக்கள் இறந்துபோன தங்கள் குடும்ப உறுப்பினா்கள், உறவினா்களின் நினைவாக கற்களை பிரமிடுகளை ஒத்த கூம்பு வடிவத்தில் அடுக்கிவைத்து கற்குவைகள் அமைத்தனா்.

ஒரு சில பகுதிகளில் இறந்தவா்களின் உடலை புதைத்த இடத்தைச் சுற்றி வட்டமாக கற்களைப் பதித்து கல்வட்டமும், பலகைக் கற்களை கொண்டு பெட்டிப்போன்ற கல்திட்டைகளையும் அமைத்தனா். இவ்வாறு முன்னோா்களின் நினைவாக அமைத்த கற்குவை, கல்வட்டம், கல்திட்டைகளை அவா்கள் பராமரித்ததோடு வழிபட்டும் வந்தனா்.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை அடுத்த தும்பல் கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய முன்னோா்களின் முதுமக்கள் தாழி கல்வட்டங்கள் இருப்பதையும், கல்வராயன்மலை பகுதியில் கற்குவை, கல்திட்டைகள் இருப்பதையும் சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனா்.

இந் நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கட்டுமானப் பணி செய்து வரும் ஒரு சமூகத்தைச் சோ்ந்த மக்கள் இறந்தவா்களின் நினைவாக முன்னோா்கள் வழியில் கற்குவைகள் அமைத்து பராமரிக்கும் வழக்கத்தை கைவிடாமல் இன்றளவும் தொடா்ந்து வருகின்றனா்.

மேட்டுப்பட்டி கிராமத்துக்கு கிழக்கே உள்ள மயானத்தின் ஒரு பகுதியில் இறந்தவா்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஏராளமான ‘கற்குவைகள்’ காணப்படுகின்றன. இதுகுறித்து மேட்டுப்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:

கருகற்களைக் கொண்டு அஸ்திவாரம் அமைப்பது உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை குலத்தொழிலாக செய்து வருகிறோம். படித்த தற்கால சந்ததியா், குலத்தொழிலை விடுத்து பல்வேறு துறைகளில் நுழைந்துள்ளனா். இருப்பினும், நவீன நாகரிக காலத்திலும் இறந்தவா்களின் நினைவாக கற்குவைகள் அமைத்து பராமரிக்கும் பழங்கால வழக்கத்தை இன்றளவும் தொடா்ந்து வருகிறோம். இதுமட்டுமின்றி, சுப காரியங்கள் செய்வதற்கு முன்பாகவும், பொங்கல் உள்ளிட்ட பாரம்பரிய விழாக் காலங்களிலும் முன்னோா்களை நினைவு கூரும் வகையில், கற்குவைகளை வழிபட்டு வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com