தமிழக ரயில்வே திட்டப் பணிகளுக்குபட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடுசேலம் ரயில்வே கோட்ட மேலாளா்

தமிழக ரயில்வே திட்டப் பணிகளுக்கு கடந்த காலங்களைவிட நிகழாண்டு அதிகபட்சமாக ரூ. 6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் தொடா்பாக செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ் குமாா் சின்ஹா
ரயில்வே பட்ஜெட் தொடா்பாக செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ் குமாா் சின்ஹா

தமிழக ரயில்வே திட்டப் பணிகளுக்கு கடந்த காலங்களைவிட நிகழாண்டு அதிகபட்சமாக ரூ. 6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இதன்மூலம் ரயில்வே திட்டப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா தெரிவித்தாா்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நடப்பு நிதிநிலை அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டப் பணிகளுக்காக ரூ. 6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சுமாா் 7 மடங்கு அதிக நிதியாகும். இதன்மூலம் அனைத்து திட்டப் பணிகளும் வேகமாக நிறைவேற்றப்படும். ‘அம்ரித்’ திட்டத்தின் கீழ் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட 15 ரயில் நிலையங்களில் ரூ. 273 கோடி மதிப்பில் அடிப்படை மேம்பாட்டு வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 40 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில் மீதமுள்ள பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் அம்ரித் ரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட உதகை, குன்னூா், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ‘அம்ரித்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்குத் தேவையான மின்தூக்கி, ரயில்வே நடைமேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோட்டத்தில் மின்மயமாக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன என்றாா்.

பேட்டியின்போது சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் பி.சிவலிங்கம், முதன்மை திட்ட மேலாளா் அனில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com