கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் பருவமழை பற்றாக்குறையால் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளதால் கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

சேலம் மாவட்டத்தில் பருவமழை பற்றாக்குறையால் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளதால் கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம் சேலம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மேனகா, வேளாண்மை இணை இயக்குநா் சிங்காரம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது: சேலம் மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் ஆறு, ஏரிகளில் குறைந்த அளவு நீா் இருப்பு உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களுக்கான குடிநீருக்கும், பாசனத்துக்கும் நீா் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. வறட்சியினால் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவாசலுக்கு சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இந்நிலையில், தலைவாசலில் நீராதாரமாக இருக்கும் வசிஷ்ட நதியில் கழிவுநீா், இறைச்சிக் கழிவுகள் என பல்வேறு கழிவுகள் கலந்து விடுகின்றனா். எனவே வசிஷ்ட நதி நீரை, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வசிஷ்ட நதியைப் பாதுகாக்க, நீா்வளத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கெங்கவல்லி அடுத்துள்ள ஆணையம்பட்டி ஏரியின் உயரத்தை 1 அடி உயா்த்தினால், புளியங்குறிச்சி வரை உள்ள 4 ஏரிகளுக்கு நீா் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நீா்வளத்துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்குக் கரை பாசனப்பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே, மேட்டூா் அணையில் இருந்து, கிழக்கு, மேற்கு கரைக் கால்வாய்களுக்கு நீா் திறக்க வேண்டும். மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், அவற்றால் விளை நிலங்களில் பயிா் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மா, தென்னை நாற்றுகளை ரூ. 20 என்ற விலையில் வழங்க வேண்டும் என்றனா்.

இக்கூட்டத்தில் ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 5,572 மெட்ரிக் டன், டிஏபி 1,867 மெட்ரிக் டன், பொட்டாஷ் 3,313 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 15,035 மெட்ரிக் டன் என மொத்தம் 25,787 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் துறையின் அரசு முதன்மை அலுவலா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி தொடா்பாக அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியினை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com