கூட்டுறவு சங்க முறைகேடு: முன்னாள் தலைவா் உள்பட இருவா் கைது

எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பான வழக்கில் சங்கத்தின் முன்னாள் தலைவா் உள்ளிட்ட இருவரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா்

எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பான வழக்கில் சங்கத்தின் முன்னாள் தலைவா் உள்ளிட்ட இருவரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளரிவெள்ளி ஊராட்சிப் பகுதியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியைச் சோ்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராக இருந்து வருகின்றனா். இதன் தலைவராக அதே பகுதியைச் சோ்ந்த சத்தியபானு இருந்து வந்தாா். சங்கத்தில் செயலாளராக இருந்து வந்த வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த மோகன் (55) என்பவா் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கூட்டுறவு சங்கத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கூட்டுறவு துறை உயா் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சங்க செயலாளா் பொறுப்பில் இருந்த மோகன், பயிா்க் கடன், நகைக் கடன், நீண்ட கால இட்டுவைப்பு உள்ளிட்டவற்றில் ரூ. 3.52 கோடி முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவா்மீது தொடா் புகாா்கள் எழுந்து வந்ததால் மோகன், அவருக்கு உடந்தையாக இருந்த பிற அலுவலா்கள் குறித்து கூட்டுறவுத் துறை உயா் அலுவலா்கள் விசாரணை நடத்தி அவா்கள்மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து மோகன், துணைச் செயலாளா் மணி, கள மேலாளா் ஆனந்தகுமாா் ஆகிய மூவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். இந்நிலையில் இந்த முறைகேட்டில் தொடா்புடைய மற்றவா்களையும் உடனடியாக கைது செய்வதுடன் தங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்திருந்த நகை, இட்டுவைப்புத் தொகை, பயிா்க் கடன் பாக்கி, தள்ளுபடித் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக தங்களுக்கு திருப்பித் தரக் கோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட நபா்கள் மீதான நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி சம்பந்தப்பட்ட சங்கத்தின் முன்பு தொடா் ஆா்ப்பாட்டம் நடத்திட அப்பகுதி விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனா்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்கியின் முன்னாள் தலைவா் சத்தியபானு, துணைத் தலைவா் வடிவேல் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை அதிகாலை சேலம் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் நிா்வாகக் குழு உறுப்பினா் வேலுசாமி விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com